Tuesday, January 16, 2007

செய்!


ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார்.

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார்.

இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

வழி


ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?

ஆயுதம்


ஒரு மன்னன் இருந்தான். அவன் எப்போதுமே ஒரு விதப் பயத்தில் இருந்தான். எதிரிகள் எப்போதும் தாக்கலாம் என்ற பயம் அவனுக்கு. நம் பதவியையும், சுக போக வாழ்க்கையையும் இழந்துவிடுவோமோ என்கிற பயம் அவனை எப்போதுமே ஆட்டிப்படைத்தது. தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று ஆலோசனை செய்தான். தனக்கென்று சிறப்புக் காவலர்களை நியமித்துக் கொண்டான். அவனும் நிறைய ஆயுதப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டான். ஒரு பயிற்சி முடிந்ததும் அவனுக்குத் திருப்தி ஏற்படாது. உடனேயே அவனுக்கு இன்னொரு ஆயுத்தின் மேல் பிரியம் வந்துவிடும்; அந்த ஆயுதம் பற்றிய பயிற்சியில் மூழ்கிவிடுவான். இப்படியாக அவன் பல ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றான். ஆனாலும் அவனது பயம் மட்டும் நீங்காமல் அப்படியே இருந்துவந்தது.

மன்னன் எப்போதுமே ஆயுதப் பயிற்சியிலேயே மூழ்கியிருந்ததால், அரசாட்சியில் அவன் கவனம் குறைந்தது. தன்னப் பாதுகாத்துக் கொள்வதிலும், தன் பயத்துக்குத் தீனி போடுவதிலும் குறியாக இருந்த அவன், நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அவன் மேல் மக்கள் நம்பிக்கை இழந்தார்கள். மக்கள் வெகுண்டு, புரட்சி செய்து, அந்த மன்னனைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, வேறொருவனை மன்னனாக ஆக்கினார்கள்.

புதிய மன்னன் எதற்கும் அஞ்சாத ஒரு சிறந்த வீரன். தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். மக்களுக்குப் பல்வேறு நலப் பணிகள் செய்தான். தனது படைகளைப் பலப்படுத்தினான். சிறந்த முறையில் நீதி வழங்கி, நல்லாட்சி புரிந்தான். மக்கள் மகிழ்ந்தார்கள்; அவனுக்காக உயிர் விடவும் தயாராக இருந்தார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் அவனது மக்கட்பலம் பற்றி அறிந்து, பயந்தார்கள். நமது மன்னன், படையெடுத்துச் சென்று, பல நாடுகளை வென்று, தனது நாட்டு எல்லையை விரிவாக்கினான். பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிந்து மறைந்தான்.

இந்த இரு மன்னர்களும் எய்திய நிலையில் ஏன் இத்தனை வித்தியாசம்? இருவருக்கும் ஒரே விதமான சூழ்நிலைதான் தரப்பட்டது. ஒருவனால் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை; ஆனால், இன்னொருவனால் இன்னும் சிறப்பாகச் செய்து வெற்றிகளைக் குவிக்க முடிந்ததே; இது எதனால்? இந்த வெற்றி அல்லது தோல்விக்குக் காரணம் அவர்களின் மனத் திடம்தான். ஒருவன் பயத்திற்கு அடிமையானான்; இன்னொருவன், பயத்தை வென்று, உலகையும் வென்றான்.

மாவீரன் எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும்கூட எதிரிகளை எதிர்த்துத் தீரமுடன் போரிடுகிறான்; அவனது தீரம் அவனுக்கு வெற்றியையும் தேடித் தருகிறது. ஆனால், கோழையோ, ஏராளமான ஆயுதங்களைத் திரட்டி வைத்திருக்கிறான்; அவனிடம் வாள், வேல், வில்லம்பு, குத்தீட்டி, கவசம் உள்ளிட்ட அனைத்து விதமான ஆயுதங்களும் உள்ளன. என்ன பயன்? அவன் உள்ளூரப் பயந்து நடுங்குகிறான். இத்தனை ஆயுதங்கள் இருந்தும், அவன் பயந்தது போலவே, எதிரிக்கு இறையாகி விடுகிறான். உனது பலம் உனது ஆயுதங்களில் இல்லை. உன் மனோதிடத்தில்தான் உன் பலமும், வெறறியின் விதையும் பொதிந்திருக்கின்றன.

இந்தகச் சிறுகதையை, நான் ஏதோ மனனர்களுக்காகவும், வீரர்களுக்காகவும் சொல்ல வரவில்லை; இதில் சொல்லியிருக்கும் பாடம் உங்களுக்கும் பொருந்தும். இன்றைய வாழ்வில், உங்களுக்குப் படிப்பு, ஆள் பலம், பணம், வசதிகள் முதலிய ஆயுதங்கள் ஏதும் இல்லாமலிருக்கலாம். அல்லது, இவைகள் எல்லாம் இருந்தும், தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். உங்கள் மனோ திடத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டால், உங்களை வெல்லும் ஆயுதம் வேறெதுவும் இந்த உலகில் இல்லை.

Tuesday, May 30, 2006

நன்றி



இன்றைய தினமலரில், எனது இந்தப் பதிவு பற்றிப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
http://www.dinamalar.com/2006may30/flash.asp


எனது முயற்சிக்கு ஊக்கமளித்த தினமலருக்கு மிக்க நன்றி. முக்கியமாக, என் பதிவிற்கு வருகையளித்த நூற்றுக் கணக்கான இணைய வாசகர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

Friday, May 26, 2006

முதல் படி


உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

விடாமுயற்சி


அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.

வெற்றியாளர்


வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- George Washington Carver.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
- George Bernard Shaw.

Thursday, May 25, 2006

உயர்வு


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

அறிவு


உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

- கவிஞர் கண்ணதாசன்.

மனிதர்


தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

- மகாகவி சுப்பிரமணிய பாரதி.

வாழ்க்கை


என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.

Wednesday, May 24, 2006

ஊக்கம்


ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே:

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
செய்வன திருந்தச் செய்.
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
பதறாத காரியம் சிதறாது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.

உதவி


உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! - சுவாமி விவேகானந்தர்.

சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.
- O. Wayne Rollins.

ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.
- Lao Tzu

உழைப்பு = வெற்றி


துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

- சுவாமி விவேகானந்தர்.

Tuesday, May 23, 2006

நம்பிக்கை

இது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி:
தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

வெற்றி-தோல்வி


நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: "வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது."
- W. Clement Stone

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
- Albert Einstein

பயம்


கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

பார்வை


நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.


உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
- Mark Twain.

சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
- Robert Allen.

நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.
- Dale Carnegie

உயரம்




நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?

முயற்சி


விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

வாய்ப்பு


இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

காரண - காரியத் தொடர்பு


நமக்காக என்ன நடக்கவுள்ளதோ அது நமக்காக நடக்கத்தான் செய்யும்; எதுவும் நடப்பது நமது நன்மைக்காகத்தான். கடலலை வீசுவதில்லை; அது வீசுவிக்கப்படுகின்றது. மழை தானாகக் கொட்டுவதில்லை; அது ஒரு செயற்பாடாகவே இயக்கப்படுகின்றது. காலங்களும் காலநிலைகளும் சம்பவங்களும் காரணமின்றித் தானாகவே நடப்பதில்லை; ஒன்றில் ஒன்று ஒட்டி நின்றே நடந்தேறுகின்றன.

காரியங்களனைத்துமே காரணங்களோடுதான் நடக்கின்றன. ஒரு முன்கூட்டியே அமைத்துவிடப்பட்ட மாறாத விதிமுறைப்படியேதான் இயற்கையின் எல்லா இயக்கங்களுமே இயங்குகின்றன.

என்றோ, எதற்கோ, எப்படியோ நடந்துவிடும் சம்பவங்கள் இன்று இதற்காகத்தான் இவ்வாறு நிகழ்ந்தனவோ என்று நம்மை எண்ண வைப்பதுண்டு. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த அனுபவத்தை ஏதோ ஒருவிதத்தில் நாம் உணர்ந்திருப்போம்.

மனம்


மனம் என்றால் என்ன, அது மனித உடலில் எங்கே ஒளிந்திருக்கிறது என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம் எண்ணங்களின் தொகுப்பே மனம் என்பது. சுருங்கச் சொன்னால் உங்களின் எண்ணங்கள்தான் உங்களின் மனம். மனம் உள்ளவன் என்பதாலேயே மனிதன் என்ற பெயர் வந்தது. உடலைப் போன்றே மனமும் ஒரு சடப் பொருள்தான். உடல் துன்பப் படும்போது, மனமும் துன்பப் படும். அதே மாதிரி, மனதில் ஏற்படும் மாற்றங்கள் உடலைப் பாதிக்கும்.

அப்படியானால், உடலில் ஏற்படும் எந்த மாற்றங்களாலும் பாதிக்கப்படாத ஏதோ ஒன்று நம்மிடம் இருக்கிறதா?

எண்ணம், சொல், செயல்


நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.

படிப்பில் முதலிடம்


சமீபத்தில் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதலிடம் பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்:

நான் கடுமையான பயிற்சி எல்லாம் செய்யவில்லை. காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் கவனத்துடன் படிப்பேன். - புவியியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி.

நான் படிப்பதற்காக தூக்கத்தையும் சாப்பாட்டையும் கூட மறந்துவிடுவேன். பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் சொல்லிக் கொடுத்ததும், பெற்றோர் என்னை சிறந்த முறையில் ஊக்குவித்ததும்தான், நான் அதிக மதிப்பெண் பெறக் காரணம். காலையிலும் மலையிலும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வேன். இதனால் மனது ஒருங்கிணைந்து செயல்பட்டு முதல் மார்க் எடுத்துள்ளேன். - தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவர்.

தினமும் காலை 4 மணி முதல் 7 மணி வரை படிப்பேன். மாலை 5:30 முதல் இரவு 7 மணி வரை டியூஷன் செல்வேன். இரவு 7:30 முதல் 10 மணி வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். படிக்காமல் இருந்தால் எனக்குத் தூக்கம் வராது. - பயோ கெமிஸ்ட்ரியில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்.

கணக்குப் பாடங்களை மாலை நேரத்தில் படிப்பேன். மற்ற பாடங்களை காலை நேரத்தில் படிப்பேன். படித்ததை நினைவில் பதிவு செய்ய இந்த நேரங்கள் எனக்கு உகந்ததாக இருந்தது. என் அப்பா, அம்மா இப்படிப் படி, இதைப் படி, அதைப் படி என்று தொந்திரவும் செய்ததில்லை.எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தனர். பாடம் நடத்திய ஆசிரியர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையும், அப்பா அம்மா என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் நான் நன்றாகப் படிக்க தூண்டுதலாக இருந்தது. - சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்ற மாணவி.

தினந்தோறும் நள்ளிரவு ஒரு மணி வரை பாடங்களைப் படிப்பேன். நான் டியூஷன் எதற்கும் செல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிள் டிவி எதுவும் பார்க்கவில்லை. முழுக்க, முழுக்க படிப்பில் மட்டுமே செலுத்திய காரணத்தால் என்னால் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. மேலும், பாடங்களை உருத்தட்டாமல் புரிந்து படித்து பரீட்சைகளை எழுதினேன். - இரண்டாமிடம் பெற்ற மாணவர்.


மேற்கண்டவற்றிலிருந்து நாம் அவர்களது வெற்றியின் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது:
- கடினமாக உழைத்துப் படிக்க வேண்டியது அவசியம்; அதே நேரத்தில், புரிந்து படிக்க வேண்டும்.
- படிக்கும் நேரம் முக்கியம். அதிகாலை நேரத்தில் எழுந்து படிப்பது மிகவும் நல்லது.
- பயிற்சி மிக முக்கியம். நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை, திரும்பத் திரும்பப் பயிற்சி செய்ய வேண்டும்.
- கேபிள் டிவி பார்க்காமல் இருப்பது நல்லது.
- ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆதரவும், ஊக்குவிப்பும் மிக, மிக அவசியம்.

Thursday, February 16, 2006

இஸ்த்தானாவில்














இஸ்த்தானாவில்...

சென்ற மாதம், இஸ்த்தானா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நமது தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட சில படங்கள் இங்கே...

மலர்க் கண்காட்சி







சென்ற சீனப்புத்தாண்டு விடுமுறையில், என் நண்பரின் குடும்பத்தோடு சேர்ந்து, என் குடும்பத்தினர் அனைவரும் செந்தோசா சென்றோம். மலர்க் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்தது.

இந்த வளைப்பதிவு பிறந்த கதை


இன்று கொஞ்சம் சோர்வாக இருந்தது. எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமா என்று யோசித்தேன். அதன் விளைவுதான் இந்த விளக்கு. இது அணையா விளக்காய் என்றும் தொடரும். என் மனதில் பட்ட எண்ணங்களையும், நான் பார்த்த, கேட்ட, படித்த உபயோகமான விஷயங்களையும் இந்த இணைய விளக்கு உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். நான் வாழுமிடம் சிங்கப்பூர் என்றாலும், என் இதயம் இருக்குமிடம் இந்தியாதான். எனவே, இந்தப் பதிவில், சிங்கப்பூர் விஷயங்களும், இந்திய நிகழ்வுகளும் சேர்ந்தே இடம்பெறும். இந்தப் பதிவை 'விலக்கு' என்று எண்ணி விலக்கி விடாமல், இந்த விளக்கின் ஒளியிலே திளைத்து மகிழுங்கள்!!

இந்த இணைய விளக்கு, இணைய வானில் ஒரு மின் மினிப் பூச்சியாய், என் எண்ண ஒளியை உலகெங்கும் கொண்டு சேர்க்கட்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!