Tuesday, January 16, 2007

ஆயுதம்


ஒரு மன்னன் இருந்தான். அவன் எப்போதுமே ஒரு விதப் பயத்தில் இருந்தான். எதிரிகள் எப்போதும் தாக்கலாம் என்ற பயம் அவனுக்கு. நம் பதவியையும், சுக போக வாழ்க்கையையும் இழந்துவிடுவோமோ என்கிற பயம் அவனை எப்போதுமே ஆட்டிப்படைத்தது. தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று ஆலோசனை செய்தான். தனக்கென்று சிறப்புக் காவலர்களை நியமித்துக் கொண்டான். அவனும் நிறைய ஆயுதப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டான். ஒரு பயிற்சி முடிந்ததும் அவனுக்குத் திருப்தி ஏற்படாது. உடனேயே அவனுக்கு இன்னொரு ஆயுத்தின் மேல் பிரியம் வந்துவிடும்; அந்த ஆயுதம் பற்றிய பயிற்சியில் மூழ்கிவிடுவான். இப்படியாக அவன் பல ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றான். ஆனாலும் அவனது பயம் மட்டும் நீங்காமல் அப்படியே இருந்துவந்தது.

மன்னன் எப்போதுமே ஆயுதப் பயிற்சியிலேயே மூழ்கியிருந்ததால், அரசாட்சியில் அவன் கவனம் குறைந்தது. தன்னப் பாதுகாத்துக் கொள்வதிலும், தன் பயத்துக்குத் தீனி போடுவதிலும் குறியாக இருந்த அவன், நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அவன் மேல் மக்கள் நம்பிக்கை இழந்தார்கள். மக்கள் வெகுண்டு, புரட்சி செய்து, அந்த மன்னனைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, வேறொருவனை மன்னனாக ஆக்கினார்கள்.

புதிய மன்னன் எதற்கும் அஞ்சாத ஒரு சிறந்த வீரன். தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். மக்களுக்குப் பல்வேறு நலப் பணிகள் செய்தான். தனது படைகளைப் பலப்படுத்தினான். சிறந்த முறையில் நீதி வழங்கி, நல்லாட்சி புரிந்தான். மக்கள் மகிழ்ந்தார்கள்; அவனுக்காக உயிர் விடவும் தயாராக இருந்தார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் அவனது மக்கட்பலம் பற்றி அறிந்து, பயந்தார்கள். நமது மன்னன், படையெடுத்துச் சென்று, பல நாடுகளை வென்று, தனது நாட்டு எல்லையை விரிவாக்கினான். பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிந்து மறைந்தான்.

இந்த இரு மன்னர்களும் எய்திய நிலையில் ஏன் இத்தனை வித்தியாசம்? இருவருக்கும் ஒரே விதமான சூழ்நிலைதான் தரப்பட்டது. ஒருவனால் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை; ஆனால், இன்னொருவனால் இன்னும் சிறப்பாகச் செய்து வெற்றிகளைக் குவிக்க முடிந்ததே; இது எதனால்? இந்த வெற்றி அல்லது தோல்விக்குக் காரணம் அவர்களின் மனத் திடம்தான். ஒருவன் பயத்திற்கு அடிமையானான்; இன்னொருவன், பயத்தை வென்று, உலகையும் வென்றான்.

மாவீரன் எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும்கூட எதிரிகளை எதிர்த்துத் தீரமுடன் போரிடுகிறான்; அவனது தீரம் அவனுக்கு வெற்றியையும் தேடித் தருகிறது. ஆனால், கோழையோ, ஏராளமான ஆயுதங்களைத் திரட்டி வைத்திருக்கிறான்; அவனிடம் வாள், வேல், வில்லம்பு, குத்தீட்டி, கவசம் உள்ளிட்ட அனைத்து விதமான ஆயுதங்களும் உள்ளன. என்ன பயன்? அவன் உள்ளூரப் பயந்து நடுங்குகிறான். இத்தனை ஆயுதங்கள் இருந்தும், அவன் பயந்தது போலவே, எதிரிக்கு இறையாகி விடுகிறான். உனது பலம் உனது ஆயுதங்களில் இல்லை. உன் மனோதிடத்தில்தான் உன் பலமும், வெறறியின் விதையும் பொதிந்திருக்கின்றன.

இந்தகச் சிறுகதையை, நான் ஏதோ மனனர்களுக்காகவும், வீரர்களுக்காகவும் சொல்ல வரவில்லை; இதில் சொல்லியிருக்கும் பாடம் உங்களுக்கும் பொருந்தும். இன்றைய வாழ்வில், உங்களுக்குப் படிப்பு, ஆள் பலம், பணம், வசதிகள் முதலிய ஆயுதங்கள் ஏதும் இல்லாமலிருக்கலாம். அல்லது, இவைகள் எல்லாம் இருந்தும், தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். உங்கள் மனோ திடத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டால், உங்களை வெல்லும் ஆயுதம் வேறெதுவும் இந்த உலகில் இல்லை.

0 Comments:

Post a Comment

<< Home